பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்!
தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் கடந்த 15 முதல் 20 நாட்கள் ஆகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனால் காய்கறிகளின் விளைச்சல் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அதனால் அனைத்து இடங்களிலுமே காய்கறி, தக்காளி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் பொதுமக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் அடைந்து உள்ளது.
அதிலும் முக்கியமாக தக்காளி ஒரு கிலோ 150 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கள் அனைத்துமே கிட்டத்தட்ட நூறு ரூபாய் அளவிற்கு விற்கப்படுகின்றன. இதை மக்களால் சமாளிக்கவே முடியவில்லை. ஏனென்றால் தக்காளி இல்லாமல் நமது சமையலில் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்று தான் எல்லாரும் சொல்வார்கள்.
ரசம் வைத்தால் கூட அதற்கு தக்காளி சேர்ப்பது நமது பழக்கமாகிவிட்டது. கிலோ 10 ரூபாய்க்கு விற்ற கிலோ தக்காளி தற்போது 150 ரூபாய் என்றால் சாமானிய மக்களால் வாங்க முடியுமா? கடந்த பத்து பதினைந்து நாட்களாகவே இந்த நிலைதான் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உள்ளது.
இதை சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் தக்காளி ஆஃபர் என்ற பெயரில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மக்களை அசத்தியுள்ளார். இவர் சோத்துப்பாக்கம் – மேல்மருவத்தூர், வந்தவாசி சாலைகளில் ஆம்பூர் பிரியாணி கடை என்ற பெயரில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உணவகங்களை நடத்தி வருகிறார்.
இவர் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும், அதே போல் இரண்டு கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் புதுமையான அறிவிப்பை அறிவித்துள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாக பரவிக் கொண்டுள்ளது.
இந்த முறை குறித்து உணவகத்தின் உரிமையாளர் ஞானவேல் கூறும்போது, பழைய பண்டமாற்று முறைதான் விலை ஏற்றத்திற்கு சரியான தீர்வு. அதனை வலியுறுத்தவே நான் எனது உணவகத்தில் இவ்வாறு அறிமுகப்படுத்தி உள்ளேன் என்று கூறினார்.