
ADMK DMK: சட்டமன்ற தேர்தலில் எப்போதும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருவது திமுகவும், அதிமுகவும் தான். ஒரு காலத்தில், சிறிய கட்சிகளின் துணை இல்லாமலேயே இவ்விரண்டு கட்சிகளும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கும் நிலையாக இருந்தது. ஆனால் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலை சிறந்த அரசியல் தலைவர்கள் மறைந்த பிறகு, தமிழக அரசியலே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.
புதிதாக உதயமாகியுள்ள கட்சிகளை கண்டு அஞ்சுவதும், எதிர்கட்சிகள் அதனுடன் கூட்டணி அமைக்க போராடுவதும் நடந்த வண்ணம் உள்ளது. முன்பு இருந்தது போல தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காலம் மாறிவிட்டது என்று கருத்து கணிப்பு கூறுகிறது. தேமுதிக, பாமக போன்ற மூன்றாம் நிலை கட்சிகள் மட்டுமல்லாது சிறிய கட்சிகளாக அறியப்பட்டு வரும் புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளின் ஆதரவோடு மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதனால் தான் ஆளுங்கட்சியான திமுக, விசிக, மதிமுக போன்ற கட்சிகளை கூட்டணி தந்திரத்தை பயன்படுத்தி தன்னுடனே வைத்துள்ளது. மேலும் அதிமுகவும், சிறிய கட்சிகளையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் சேர்க்க போராடி வருகிறது. ஆக மொத்தம் சிறிய கட்சிகளோ அல்லது கூட்டணியோ இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த திராவிட கட்சிகள் அதற்கான பணிகளில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது.