
DMK TVK CONGRESS: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி கணக்குகளில் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிலும் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்கும் முயற்சி தான் முழு வீச்சில் துவங்கி இருக்கிறது. அதற்கடுத்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை விஜய் கூட்டணிக்கு கையேந்தும் நிலைமை வந்து விட்டது.
இந்த நிலை திராவிட மற்றும் தேசிய கட்சிகள் தங்களுடைய தனி பெரும்பான்மையை இழந்து விட்டதை தெளிவாக காட்டுகிறது. மேலும், தவெகவின் முடிவை பொறுத்து தான் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், பாஜக-காங்கிரஸ் விஜய் கூட்டணிக்காக கடுமையாக மோதி கொள்கிறது என்றே கூறலாம். பாஜக கரூர் விவகாரத்தில் முழுக்க முழுக்க விஜய்யின் குரலாகவே செயல்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால் காங்கிரஸ் நேரடியாக தனது விருப்பத்தை தெரிவிக்காமல் தமிழக காங்கிரஸ் தலைவர்களை வைத்து காய் நகர்த்தி வருகிறது.
கே.எஸ். அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த என அனைவரும் ஒரே மாதிரியாக கழக குரல் எழுப்புவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நேற்று கூட மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனில் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களின் இந்த பேச்சு திமுக அரசு மீது குற்றம் சுமத்தி விட்டு விஜய் பக்கம் செல்லும் சதி வேலையாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
