ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நாளாகும். “அட்சய” என்பதற்கு ‘அல்ல அல்ல குறையாதது’ என்று அர்த்தம். அட்சய பாத்திரத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் தீர்ந்து விடாமல் இருந்து கொண்டே இருக்கும்.
அத்தகைய அட்சய பாத்திரத்திற்கு நிகரான ஒரு நாள் தான் இந்த அட்சய திருதியை. எனவே தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இந்த அட்சய திருதியை உருவானதற்கு பின்பு ஒரு பெரிய கதையே இருக்கிறது. இதனை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
ஏனென்றால் இதனை தெரிந்து கொண்டால் தான் இந்த அட்சய திருதியை நாளில் என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.
கிருஷ்ணரும் குசேலனும் சிறுவயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கிருஷ்ணர் கோகுலத்தை பிரிந்து துவாரகையின் மன்னர் ஆனார். ஆனால் குசேலனோ உன்ன உணவும் இன்றி பரம ஏழையாக மிகுந்த துன்பத்தில் கோகுலத்தில் வாழ்ந்து வந்தார். கிருஷ்ணரின் கொடை தன்மையை அறிந்த குசேலன், அவரிடம் உதவி கேட்க அவரது வீட்டில் இருந்த அவல்பொறியை எடுத்துக்கொண்டு அவரது நண்பரான கிருஷ்ணரை காண செல்கிறார்.
துவாரகையை அடைந்த குசேலன் அவரது நண்பர் கிருஷ்ணரை பார்க்க அரண்மனையின் உள்ளே நுழைகிறார், ஆனால் அங்கு இருந்த காவலர்கள் அவரது அழுக்கு உடையை பார்த்து அரண்மனைக்கு உள்ளே நுழைய விடாமல் வெளியேயே நிறுத்தி விடுகிறார்கள். அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணர் குசேலனை கண்டதும் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
மேலும் கிருஷ்ணர் அவரை நன்றாக உபசரித்தார். அதன் பிறகு குசேலன் கொண்டு வந்த அவல்பொறியை சிறிதளவு வாயில் எடுத்துப் போட்ட பின்னர் “அட்சயம்” என்ற வார்த்தையை கூறுகிறார். இந்த வார்த்தையை கிருஷ்ணர் கூறியவுடன் குசேலனது வீட்டில் தங்கமும், வெள்ளியும் குவிந்து விடுகிறது. அதன் பிறகு வீடு திரும்பிய குசேலன் அவரது வீட்டில் தங்கமும், வெள்ளியும் குவிந்து இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார்.
இவ்வளவு தங்கம், வெள்ளியை வைத்து நாம் என்ன செய்வது?! என்று எண்ணிய குசேலன் அங்கு இருந்த ஏழை எளியவர்களுக்கு தானமாக அதனை கொடுத்து விட்டார். ஆனால் அவர் எவ்வளவு தானம் செய்தாலும் அங்கு இருந்த தங்கமும், வெள்ளியும் குறையாமல் பெருகி கொண்டே இருந்தது.
இப்படி கிருஷ்ணரிடம் இருந்து குசேலன் செல்வத்தைப் பெற்ற இந்த நாளை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடி வருகிறோம். இந்த அட்சய திருநாள் அன்று தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் அது இரட்டிப்பாகாது. தங்கத்தை மற்றவர்களுக்கு தானம் செய்தால் மட்டுமே இரட்டிப்பாகும். தங்கத்தை தானம் செய்ய இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். இதனால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.
ஏனென்றால் இந்த நாளில் தான் அன்னபூரணி தேவி பிறந்தார். அட்சய திருதியை என்பது தங்கம் வாங்குவதற்கு மட்டும் உரிய நாள் கிடையாது. ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்கக்கூடிய நாளாகும். ஏழை எளியவர்களுக்கு அன்றைய நாளில் தானம் வழங்கினால் மட்டுமே செல்வம் பெருகும்.