DMK: அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், அது தற்போது அவர் திமுகவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் சமயத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட அவர், தனது அமைச்சர் பதவியை இழந்தார்.
ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், நிபந்தனை ஜாமீன் பெயரில் விடுவிக்கப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவருக்கு, வாரம் இருமுறை அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என இரு தினமும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் வாரம் இருமுறை அமலாக்க துறையில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இவ்வாறான நிலையில் இந்த நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு நேற்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, செந்தில் பாலாஜி தரப்பு, கடந்த 17 வாரங்களாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வருகிறார். இனியும் வர வேண்டுமா என்று கேட்க, தேவைப்படும் போது மட்டும் வந்தால் போதும், இனிமேலும் வாரம் இருமுறை ஆஜராக வேண்டாம் என்று நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

