அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆரம்பமாகும் என்று முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற பொறுப்பில் இருந்த பன்னீர் செல்வம் கட்சியிலிருந்தும், அந்த பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் என சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
அதேபோல பன்னீர்செல்வம் தரப்போ அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் எனவும், தன்னை கேட்காமல் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்து சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் ஒன்றை வழங்கி இருந்தது.
அதோடு எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய கடிதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் அவர்களை அங்கீகரிக்க வேண்டும், அவருக்கு தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படியான பரபரப்பான சூழ்நிலையில், இன்றைய சட்டசபை கூட்டத் தொடரில் பன்னீர் செல்வத்திற்கு சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் பன்னீர் செல்வத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது. ஆகவே பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சட்டசபை கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பதாக ஒரு தகவல் கிடைத்திருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆரம்பமானது. இந்த கூட்டம் ஆரம்பித்தவுடன் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமீது இப்ராஹிம், கே.கே. வீரப்பன் ஏ. எம். ராஜா, எஸ், புருஷோத்தமன், திருவேங்கடம், ஜனார்த்தனன், தர்மலிங்கம், கோவை தங்கம் உள்ளிட்ட 10 மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் இளையமன்னர் ராஜ நாகேந்திர குமரன் சேதுபதி, விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், ஐக்கிய ராஜ்யத்தின் ராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமி வேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோர் மறைவு தொடர்பாக பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு பேரவையின் இன்றைய அலுவல்கள் ஒத்தி வைக்கப்பட்டது.