ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் களம் பல்வேறு திருப்பங்களையும் எதிர் கொண்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை-மகன் மோதல் போன்றவை இந்த சமயத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் வேளையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய முகங்களின் விலகலும் அரங்கேறி வருகின்றன.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்து பரபரப்பை கூட்டினார். இவ்வாறு அதிமுகவிலிருந்து பலரும் விலகி வருவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்த கட்டத்தில், தற்போது புதிதாக அதிமுகவிலிருந்து விலகிய, வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் தனது தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வலதுகரமாக இருந்த இவர், 2025 ஏப்ரல் மாதம் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கோவை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவரும், நமது புரட்சி தலைவி அம்மா நாளிதழின் பதிப்பாளராகவும், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் இருந்த இவர் அதிமுகவிலிருந்து விலகியது கோவையில் அதிமுகவிற்கு பின்னடைவாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது இவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது கோவையில் அதிமுகவிற்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. அதிமுகவில் பல்வேறு அதிருப்திகள் நிலவி வரும் சந்தர்ப்பத்தில் இவரின் இந்த இணைவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.