BJP ADMK: ஒரு வாரத்திற்கு முன்பு தமிழகம் வருகை புரிந்த பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனை தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இரு கட்சிகளுக்குள்ளும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து இருப்பது பாஜகவிற்கு தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழக தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் சூழலில் ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தியிருந்தார். இதில் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தகவல் கசிந்தது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றியும் கலந்துரையாடியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி 4 அல்லது 5 ஆம் தேதிகளில் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளார்.
இந்த சந்திப்பில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்குமாறு அவர் நிபந்தனை விதிக்க இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். பாஜகவிற்கு தமிழகத்தில் போதிய அளவு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் கொங்கு மண்டல பகுதிகளை அவர்களுக்கு ஒதுக்கினால் அங்கும் அதிமுக தோல்வியை தான் தழுவும் என்பதால் இபிஎஸ் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது மட்டுமல்லாமல் சென்ற முறை நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாத நிலையில் இம்முறையும் இது தோல்வியடைந்தால் பாஜக – அதிமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.