5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு!
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கிவிடப் பட்டுள்ளது. அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதனை நடைமுறை படுத்தி உள்ளனர்.
எனவே தற்போது 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி பலன் அளிப்பதாகவும், இம்மாதம் அமெரிக்க அரசின் அனுமதிக்காக விண்ணப்பிக்க உள்ளோம் என்றும் அந்த பைசர் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மேலை நாடுகளில் 12 வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி எதுவும் போடப்படவில்லை. கியூபா நாட்டில் மட்டும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த வாரம் முதலே தொடங்கியது. அமெரிக்காவில் பள்ளிகள் திறந்து விட்டதன் காரணமாக 12 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பெற்றோர் கூறி வருவதன் காரணமாக, அந்த நிறுவனமும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பயோ டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போட்டு பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியவர்களுக்கு கொடுப்பதில், மிகச் சிறிய அளவான மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சிறிய அளவு டோஸ் போட்டதற்கு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாகவும், அதற்கான வலிமையுடன் குழந்தைகள் காணப்பட்டதாகவும் அந்த பைசர் நிறுவனம் தெரிவித்தது.
ஆனால் இளம் வயதினரை போல் அவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்ற தற்காலிக பக்க விளைவுகளும் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம் தரவேண்டும் என அனுமதி கோரப்போவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த உதவி தலைவர் டாக்டர் பில் கிருபர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது இவ்வாறு கூறினார்.
இந்த தடுப்பூசி 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்படுவதாகவும், அதன் காரணமாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க உள்ளோம் என்றும் கூறினார். அதன் பிறகு படிப்படியாக ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் இதற்காக விண்ணப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த சிறு வயது குழந்தைகளின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தடுப்பூசி அவசியம் என்று பெற்றோரும் வலியுறுத்துவதாக தெரிவித்தார். இதேபோல் மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா நிறுவனமும், தொடக்கப்பள்ளி சிறு வயது குழந்தைகளுக்கு தனது தடுப்பு ஊசியை செலுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் பைசர் நிறுவனம் 6 மாத குழந்தைகளுக்கும் தனியாக பரிசோதனை நடத்தி வருகிறது. இதன் முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.