முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் ஒருவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என பல தியாகங்களை செய்யும் பணியாளர்களை நம்மால் பார்க்க முடிந்தது.
ஆனால் தற்போது தியாகங்கள் செய்யவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் வேலை பார்க்கும் இடத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும். வேலை கொடுத்த முதலாளிக்கு எந்தவிதமான துரோகமும் செய்யக்கூடாது என்ற அளவில் கூட தற்போதுள்ள மனிதர்கள் இல்லை இது பல இடங்களில் பிரதிபலித்து வருகிறது.
அந்த இடத்தில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் சுமார் 40 வருடங்களாக சுரேஷ் என்பவர் மாயாராம் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை வழங்கியிருந்தார்.
அந்த புகாரில் தன் கடையில் 10 வருடங்களுக்கு மேலாக ராஜேஷ் என்பவர் வேலை பார்த்து வந்ததாகவும், தங்களுக்கு தெரியாமல் போலியாக பில் தயார் செய்து அதன் மூலமாக 45 லட்சம் ரூபாய் வரையில் சிறுகச்சிறுக மோசடி செய்திருப்பதாகவும், அவர் காவல்துறையிடம் வழங்கிய புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக ஒரு வாடிக்கையாளர் டூத் பிரஷை மாற்ற பல்பொருள் அங்காடிக்கு நேரில் வந்திருந்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அப்படி நேரில் வந்து பில்லை வாங்கி சோதனை செய்தபோது வாடிக்கையாளருக்கு கொடுத்திருந்த பில்லில் 5000 ரூபாய் எனவும், ஆனால் கடையின் கணக்கிலுள்ள பில்லில் 2500 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது இதை கண்ட சுரேஷ் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இதுதொடர்பாக விசாரணை செய்தபோது தன்னுடைய பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்த ராஜேஷ் 2 பில்லை ஏற்படுத்தி தவறாக கணக்கு காட்டி மோசடி செய்து வந்தது சுரேஷுக்கு தெரியவந்தது.
அதன்பிறகு ராஜேஷிடம் விசாரணை செய்த சமயத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே தான் மோசடி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு ராஜேஷ் பணியாற்றிய 8 வருடங்களுக்கான வரவு, செலவு, கணக்கை பார்த்தபோது சிறுகச்சிறுக ரூபாய் 45 லட்சம் வரை ராஜேஷ் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மோசடி செய்த ஒட்டுமொத்த பணத்தையும் ராஜேஷ் கொடுப்பதாக எழுதி கையெழுத்துப் போட்டுக்கொடுத்திருக்கிறார். அதன் பிறகு வீட்டிற்கு சென்ற ராஜேஷ் பிறகு தலைமறைவானார். இதன் பின்னர் பல்பொருள் அங்காடி உரிமையாளரான சுரேஷ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், கோயமுத்தூர் பகுதியிலும் தலைமறைவாக இருந்த ராஜேஷ் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.
அப்படி கைது செய்யப்பட்ட அவரிடம் காவல்துறையினர் சார்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடைய தந்தை பணியாற்றிய கடையில் சாதாரண ஊழியராக சேர்ந்த ராஜேஷ் நன்றாக வேலை பார்த்து உரிமையாளர் சுரேஷுக்கு நம்பிக்கை உண்டாகும் விதத்தில் நடந்து கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
ஆகவே எல்லா விதமான கணக்குப் பொறுப்புகளையும் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அதனை பயன்படுத்திக் கொண்டு சிறுகச்சிறுக போலி பில் தயார் செய்து கொள்ளை அடித்ததாகவும் ராஜேஷ் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் கொள்ளையடித்த பணத்தை வைத்து சொந்த ஊரில் வீடு மற்றும் கார் என சொகுசாக வாழ்ந்ததும் இந்த விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஆனால் இதனை மறைத்து ஏழை போல பல்பொருள் அங்காடி உரிமையாளரிடம் ராஜேஷ் தொடர்ந்து நடித்து பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்ததாக இந்த விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அதன் பிறகு எவ்வளவு ரூபாய் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து கொள்ளையடித்துள்ளார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.