தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!
கடும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் தமிழகம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டில் வழக்கத்தை விட அதிகமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. நாடா முழுவதும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இரண்டு தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. தற்பொழுது வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில் “தற்பொழுது தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும்.
இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் தமிழகம் உள்பட கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.