
PMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரிக்கப்பட்டது.
இதன் மேல் உடன்பாடில்லாத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தமிழக அரசுக்கு பேரிடியாக இருந்தாலும், விஜய் தரப்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த உத்தரவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி இது பேசிய போது, கரூரில் நடைபெற்ற சம்பவம் முழுக்க முழுக்க சதி வேலை என்றும் கரூர் விபத்துக்கு முதல் முதலில் சிபிஐ விசாரணையை அமைக்க கோரியது பாமக தான் என்பதை இந்த நேரத்தில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கூறினார். பரப்புரை கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும், பொறுப்பின்றி செயல்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.
இந்த விபத்து நடந்து சில நாட்களிலேயே தமிழக அரசு மிகவும் பதற்றத்தோடு இருந்தது சந்தேகத்திற்க்கு வழிவகுத்தது. மேலும் கரூர் விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.