
AMMK: தமிழக அரசியல் சமீபகாலமாக பல்வேறு திருப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை திமுக, அதிமுக, விஜய் தலைமையிலான தவெக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு அணிகளிடையே நான்கு முனை போட்டி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் முத்து ராமலிங்கரின் நினைவு விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர் ஒரே மேடையில் தோன்றிய காட்சி, தமிழக அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது.
இது சாதாரண சந்திப்பாக தெரியவில்லை. புதிய அணியின் பிறப்பாக இருக்கிறது என்று பலர் கூறி வந்தனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்னும் தனது அடிப்படை ஆதரவை இழக்காமல் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். தினகரனும் தனது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறார். ஓபிஎஸ், சசிகலா ஆகியோரும் அதிமுகவை மீண்டும் இணைக்கும் முயற்சியில் உள்ளனர்.
இவர்கள் ஒரே அணியாக வந்தால், அதிமுக வாக்கு வங்கியில் பெரிய பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், இந்த கூட்டணி புதிதாக உருவாகி, அதிமுக மற்றும் திமுகவின் அரசியலை புரட்டிப் போடும் சக்தியாக மாறலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். விஜய்யின் தவெக வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இந்த புதிய ஐந்தாவது அணியின் தோற்றம், தமிழகத்தின் அடுத்த தேர்தலை முற்றிலும் மாற்றி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
