VSK: அரியலூரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் மற்றும் எம்.பி. திருமாவளவன், நடிகர் விஜய்யின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தார். கரூர் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து நேரில் சந்தித்து பேசியது, நடிகர் விஜய்யின் தனிப்பட்ட முடிவு. பொதுவாக அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுவது வழக்கம்.
ஆனால், விஜய் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து பேசுவது ஒரு புதிய அரசியல் அணுகுமுறை என்று அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த அறிவிப்பை எதிர்த்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தீர்மானம் எடுக்கிறார் என்பதையும் அவர் பாராட்டினார். இதற்கு அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.
பீகாரில் நடந்த வாக்கு திருட்டு போல, தமிழ்நாட்டில் அத்தகைய சூழ்நிலை உருவாக கூடாது என்று எச்சரித்தார். திமுக கூட்டணியின் நிலைப்பாடு குறித்து பேசும்போது, தற்போது ஒரே உறுதியான கூட்டணி திமுக தலைமையில் தான் இருப்பதாகவும், மற்ற எதிர்க்கட்சிகள் சிதறி கிடக்கின்றன என்பதும் உண்மை எனவும் கூறினார். ஓ. பன்னீர்செல்வம் கூறிய 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற கருத்து அதனை உறுதிப்படுத்துகிறது என்றார். ராமதாஸ் தலைமையிலான பாமக மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தால், விசிக தொடருமா என்ற கேள்விக்கு பார்க்கலாம் எனத் திருமாவளவன் பதிலளித்தார்.

