PMK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மக்களை சந்திக்கும் பணியும், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு எல்லா கட்சிகளும் தேர்தல் பணியில் மூழ்கியுள்ள நிலையில், பாமகவில் மட்டும் கட்சி யாரிடத்தில் உள்ளது என்ற குழப்பம் நிலவி வருகிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை கடுமையாக எதிர்த்து வந்தார். அப்போது ஆரம்பித்த மோதல் இப்போது வரை தீரவில்லை. இதற்கு பின் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கினார்.
இதனை எதிர்த்து அன்புமணி தேர்தல் ஆணையம் செல்ல, கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உறுதியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பு வந்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் தலைமை போட்டி நிலவுவதால், தேர்தல் சமயத்தில், வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் பெரிதாக, சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாளை அன்புமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய அன்புமணி ஆதரவாளர் பாலு, போராட்டத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அன்புமணியும், ராமதாசும் இணைய வேண்டுமென நாங்களும் விரும்பினோம். ஆனால் தற்போது அதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளது என்று பாலு கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமக ஒன்றுபட்டால் மட்டுமே வாக்கு வாங்கி சிதறாமல் இருக்கும் என பாமக நிர்வாகிகள் கூறுகின்றனர்.