தமிழகத்தில் தொற்றின் வீரியம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடங்கி தடுப்பு பணிகள் வரை அனைத்துப் பணிகளும் துரிதப் படுத்தப் பட்டுள்ளது.தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக இலவச ரேஷன் பொருட்களும்,நிவாரண நிதியும் வழங்கி வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து விலையில்லா அரிசியை தவிர்த்து மற்ற அனைத்து ரேஷன் பொருட்களும்விலையுடன் வழங்கப்படும் என்றும்,தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரை ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும்,ஐந்தாம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ரேஷன் பொருட்கள் வழங்க ஆரம்பித்து இரண்டு நாட்களே ஆன நிலையில்,ஊழியர்களுக்கு இன்று விடுமுறை விட்டால் பணியில் இடையூறு ஏற்படும் என்பதால் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் ரேஷன் ஊழியர்களுக்கு இன்றைய விடுமுறைக்கு பதில் மற்றொரு நாள் விடுமுறை தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.