TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதன் செல்வாக்கு பெருகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இரண்டு மாபெரும் மாநாடுகளை நடத்திய விஜய், மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து கரூர் போலீசார் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ஒருவரான மதியழகன் பிடிபட்ட நிலையில், மீதமிருக்கும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் கோரியிருந்தார். இதற்கு நீதிமன்றம், நீங்கள் தானே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியது.
இதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த் தரப்பு நான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவில்லை. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தான் ஏற்பாடு செய்தார் என்று கூறியிருந்தார். இதனால் பலரும் புஸ்ஸி ஆனந்த்யை விமர்சித்து வந்தனர். பிரச்சனை என்று வந்த உடனேயே இப்படி கை நழுவும் இரண்டாம் கட்ட தலைவர்கள் நாளை எப்படி தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
இந்த இக்கட்டான நிலையில், விஜய் யாரையும் நம்ப முடியாத நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர் மன்ற தலைவர்களை, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக்க முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன், போன்றோருக்கு விஜய் உதவாமல் இருந்தது அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக மறைமுகமாக அறிவித்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.