
ADMK TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் விஜய் மீது தவறு இருந்தாலும், திமுக அரசின் மீது தான் அனைத்து தவறும் உள்ளது, முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், காவல்துறையினர் பரப்புரைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இது போன்ற கருத்தையே முன்வைத்து வருகிறார். இவர்களின் இந்த ஆதரவு விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதற்கான முயற்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவதை அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர் சிலர் விரும்பவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. ஏனென்றால் விஜய் கூட்டணிக்கு வந்தால், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து விடும்.
ஏற்கனவே விஜய் முதல்வர் பதவியையும், கூட்டணி எங்கள் தலைமையில் தான் அமைய வேண்டும் என்பதையும், திடமாக கூறி வருகிறார். இந்நிலையில் அவர் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அவருடைய ஆதரவாளர்களுக்கு உயரிய பதவிகளையும், அதிக தொகுதிகளையும் கேட்க வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவிலிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும், தொகுதிகளில் நாங்கள் வேட்பாளராக நிற்க மாட்டோம் என்றும் அதிமுக தலைமையிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இது ஒரு வேலை நிகழ்ந்தால், கொங்கு மண்டலத்திலேயே அதிமுகவின் வாக்கு வங்கி சரிய வாய்ப்புள்ளது. இதனால் தான் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி இபிஎஸ் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேடி அலைய வேண்டிய சூழல் ஏற்படும் என்று சூசகமாக கூறியுள்ளார் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
