TVK ADMK: தவெக சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 28,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 60 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய் தனது இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பல அரசியல் கட்சி தலைவர்களும் பார்வையிட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலளாரான எடப்பாடி பழனிசாமியும் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பொது கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மின்சார விளக்குகள் அணைந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதற்கு முன் தவெக நடத்திய 4 பிரச்சாரத்திலும் கூட்டம் அலைமோதியது. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஏற்கனவே தவெக சார்பில் நடத்தப்பட்ட கூட்டங்களிலும் முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
இது மட்டுமல்லாமல் அதிமுக சார்பில் நான் மேற்கொள்ளும் பயணங்களில் கூட காவல் துறையினர் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்கவில்லை. ஆளுங்கட்சி நடத்தும் கூட்டங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் மற்ற கட்சிகளுக்கு அந்த பாதுகாப்பு தரப்படுவதில்லை என்றும், தமிழக அரசும், காவல்துறையும் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.