நாம் ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் பொழுது, ஒவ்வொரு விதமான விதிமுறைகளை பின்பற்றுவோம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். அதேபோன்று நவகிரக சன்னிதானத்தில் கொடுக்கக்கூடிய பிரசாதத்தையும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். இப்படி பல விதிமுறைகளை பின்பற்றுவதை நாம் பழக்கமாக வைத்திருக்கிறோம்.
ஆனால் இதில் பல தவறான கருத்துக்கள் என்று காலப்போக்கில் சிதைந்து விட்டது. இதுபோன்று நாம் தவறாக கருதிக் கொண்டிருக்கும் பல விதிமுறைகளுக்கான விளக்கங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
1. சிவன் கோவிலில் தரக்கூடிய விபூதியை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது:
சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு இணங்க சிவன் கோவிலில் தரக்கூடிய விபூதி, குங்குமம், புஷ்பம் இது போன்றவைகளை கூட சிலர் வீட்டிற்கு எடுத்து வர மாட்டார்கள். ஆனால் இது தவறான ஒரு செயலாகும். சிவன் கோவிலில் தரக்கூடிய பிரசாதங்களை நம் வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தருவதில் எந்த ஒரு தவறும் இல்லை.
நமது முன்னோர்கள் சிவன் கோவிலுக்கு என்று ஒரு பகுதி சொத்தை எழுதி வைத்திருப்பார்கள். அந்த காலங்களில் மன்னர்கள் அனைவரும் தனது சொத்தில் ஒரு பங்கை கோவில்களுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அந்த சொத்தின் மூலம் வரக்கூடிய பணத்தை வைத்து கோவில்களில் பராமரிப்பு வேலைகளை செய்தார்கள்.
ஆனால் ஒரு சிலர் கோவில் சொத்தை தனது சொத்து என்று குறுக்கு வழியில் அபகரித்து இருப்பார்கள். இப்படி கோவில் சொத்தை அபகரித்தவர்கள் ஒரு காலத்தில் நன்றாக இருந்தாலும், அவர்களது ஜாதக கட்டத்தில் கெட்ட காலம் ஆரம்பிக்கும் சமயத்தில் அவர்களது குலமே அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும் என்பதே உண்மை.
இது சிவன் கோவிலுக்கு மட்டுமல்ல எந்த ஒரு கோவிலின் சொத்தை அபகரித்தாலும் இந்த ஒரு நிலைமை தான். சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு இது தான் அர்த்தம். இது தவிர கோவிலில் தரக்கூடிய பிரசாதங்களை எடுத்து வரக்கூடாது என்பது முற்றிலும் தவறான கருத்து.
2. சிலர் நவகிரகங்களில் உள்ள சனி பகவானை வழிபட்டு விட்டு தொட்டு கும்பிடாமலும், திரும்பி பார்க்காமலும் வருவார்கள். அப்படி வந்தால் தான் அந்த கிரகங்களால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று நம்பி வந்தனர். ஆனால் இது தவறு.
கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் சிவனிடம் தஞ்சம் அடைந்ததால் தான், அந்த கிரகங்களுக்கு விமோசனம் கிடைத்தது.சிவனால் விமோசனம் அடைந்த நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
3. அதேபோன்று திருநள்ளாறு கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு வந்தால், அங்கு தரும் விபூதி போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்பார்கள். ஒரு சமயம் சனிபகவானுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு சிவபெருமான் திருநள்ளாறில் தான் விமோசனம் அளித்துள்ளார்.
எனவே அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வந்தால் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் நமக்கு தேவையில்லை. கோவிலில் இருக்கும் தெய்வங்கள் அனைத்தும் நமக்கு நன்மை செய்வதற்கு தானே தவிர, எந்த ஒரு தெய்வமும் கோவிலில் தரக்கூடிய பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீமையை செய்து விடாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.