
DMK BJP: திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகளையும் கேட்டு திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் தங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுகவை கடுமையாக விமர்சித்ததோடு அடுத்த தேர்தலில் ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்று கூறியிருந்தார். இதனால் திமுக தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தது.
இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று கூறியதாக தகவல் பரவியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திமுக சமூக நீதியை பின்பற்ற கூடிய கட்சியாக இருந்தால், மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே விசிகவிற்கு 2 சீட்டுக்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த சமயத்தில் தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கருத்து கூட்டணிக்குள் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நீண்ட காலமாக திமுக கூட்டணியிலிருக்கும் விசிகவிற்கு இது ஏற்புடைய பதவி என்றும் பலர் கூறி வருகின்றனர்.
கே.எஸ்.அழகிரியின் கருத்துக்கு இபிஎஸ் வரவேற்பளித்தது மற்றும் தமிழிசை சௌந்தரராஜனின் இந்த பேச்சு, இதெல்லாம் பாஜகவும்-அதிமுகவும் திட்ட மிட்டு தான் செய்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அவர்களின் கூட்டணியை கலைத்து விடலாம் என அதிமுக சதி திட்டம் திட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.