மலை வடிவத்தில் நிற்கும் சிவபெருமான்!

0
125

மனதில் நினைத்தாலே முக்தி வழங்கும் திருத்தலம் திருவண்ணாமலையில் இருக்கின்ற அண்ணாமலையார் திருக்கோவில் விஷ்ணுவும், பிரம்மாவும், யார் பெரியவர் என்று சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் அடிமுடி காணமுடியாத படி ஜோதி வடிவமாக உயர்ந்து நின்றவர் சிவபெருமான். அந்த சிறப்புக்குரிய தலம்தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்.

அதோடு பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலமாக விளங்கி வருகிறது, அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அண்ணுதல் என்பதற்கு நெருங்குதல் என்று பெயர் அண்ணா என்பது நெருங்க முடியாத என்ற பொருளை கொடுக்கிறது. பிரம்மனாலும், விஷ்ணுவாலும், நெருங்கமுடியாத நெருப்பு மலையாக நின்றதால் இத்தலம் அண்ணாமலை என்று பெயர் பெற்றது.

இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இடப்புறம் ஒரு விநாயகர் சன்னதி இருக்கிறது இவருக்கு அல்லல் தீர்க்கும் விநாயகர் என்று பெயர். முருகப்பெருமானுக்கு இருப்பதை போல விநாயகருக்கும் இருக்கின்ற 6 படை வீடுகளில் இது முதல் படைவீடு என்று சொல்லப்படுகிறது.

கிரிவலப்பாதையில் 8 திசைகளுக்கும் 8 லிங்கங்கள் இருக்கின்றன. இவை அஷ்ட லிங்கங்கள் என போற்றப்படும். அவை இந்திரலிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானலிங்கம், உள்ளிட்டவையாகும்

இந்த தலத்தில் இருக்கும் இறைவன் அண்ணாமலையார் அருணாச்சலேஸ்வரர் என்றும், அம்பாள் உண்ணாமுலையம்மன் அபித குஜாம்பாள் எனவும், அழைக்கப்படுகிறார்கள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடமாக விளங்கி வருகிறது.

25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான கோவில் இதுவாகும், இதில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னதிகள், 306 மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம், உள்ளிட்டவை அடங்கும்.

அண்ணாமலையார் திருக்கோவிலின் தற்போதைய முழுமையான கட்டிட அமைப்புகள் அனைத்தும் கட்டி முடிக்க சுமார் 1000 வருடங்கள் ஆனதாக கல்வெட்டுகள் மூலமாக அறியப்பட்டிருக்கிறது.

கைலாய மலையில் சிவபெருமான் இருப்பதன் காரணமாக, அது புனிதமானது அதேபோல சிவபெருமானே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை புனிதமாக கருதப்படுகிறது.

இந்த மலை கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் மூலமாக தெரிவிக்கப்படுகின்றன.

மாதந்தோறும் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது சிறப்புக்குரியது, கிரிவலம் வரும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக ஐதீகமிருக்கிறது சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்வதாக கருதப்படும் இந்த தலத்தில் கிரிவலப் பாதையை சித்தர்களும் வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. 7 1/2 அடி உயரமுள்ள கொப்பரையில் 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி 3,000 கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம், இவைகளை சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும் என சொல்லப்படுகிறது.

Previous articleஇரு தரப்பினருக்கிடையே  வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி!
Next articleஒரு மணி நேரத்தில் 500 ரூபாய் சம்பாதிக்கலாம்! சென்னையில் சூப்பர் வேலை ரெடி!