PMK: 2026 சட்டசபை தேர்தலை தமிழகம் முழுவதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் திராவிட கட்சிகளும், சிறிய கட்சிகளும் தங்களது ஆட்டத்தை ஆட தொடங்கி விட்டன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. ராமதாஸின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதில் அன்புமணிக்கு சிறிதும் விருப்பமில்லை. இதனால் தமிழ்குமரன் அவரது பதவியிலிருந்து விலகினார்.
இவரை தொடர்ந்து, ராமதாஸின் பேரனுக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டதையும் விரும்பாத அன்புமணி அதனை பொது மேடையிலேயே வெளிப்படுத்தி இருந்தார். அப்போதிலிருந்தே அன்புமணிக்கு ராமதாசுக்கும் மோதல் போக்கு ஆரம்பித்துவிட்டது. இந்த பிரச்சனை டெல்லி உயர் நீதிமன்றம் வரை செல்ல, அன்புமணி தான் கட்சியின் தலைவர் என்பதை நீதிமன்றம் மறுக்கவில்லை. இவ்வாறான நிலையில் ராமதாஸ் அன்புமணியை வேண்டுமென்றால் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பாமக நான் உருவாக்கி வளர்த்த கட்சி என்று கூறி வந்தார். ஆனால் அன்புமணியோ, பாமகவை தன் வசப்படுத்தி உரிமை கொண்டாட முயற்சித்து வருகிறார்.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் நிலவும் வேளையில், ராமதாஸின் ஆதரவாளரான ஜி.கே.மணி கட்சியின் தலைமை குறித்து பொதுவெளியில் பேசியதாகவும், இதற்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அன்புமணி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய ஜி.கே. மணி அன்புமணிக்கு என் மீது வருத்தமோ, கோபமோ இல்லை. நான் ராமதாஸுடன் இருப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அவருடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.