தடுப்பூசி போடவந்தால் இதை செய்வது அவசியம்! மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு!
மத்திய பெங்களூருவில் உள்ள நாகரத்பேட்டையில் உள்ள தர்மநாராயணசாமி கோயில் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு இளைஞர்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்ய மாநகராட்சி முகாமுக்குச் சென்றனர். ஆனால், இரு இளைஞர்களும் கொரோனா பரிசோதனைக்கு வந்துள்ளதாகக் கூறி அவர்களி்ன் பெயரைப் பதிவு செய்த அதிகாரிகளுக்கு ஓடிபி எண் வந்துள்ளது.
ஆனால், இளைஞர்கள் இருவரும் தாங்கள் தடுப்பூசி செலுத்த பதிவு செய்வதற்கு தான் வந்தோம் என்றும், கொரோனா பரிசோதனைக்கு வரவில்லை என்றும், ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனாலும், மாநகராட்சி ஊழியர்கள், இரு இளைஞர்களையும் வலுக்கட்டாயாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கட்டாயப்படுத்தினர்.ஆனால், அந்த இரு இளைஞர்களும் தாங்கள் உடல்நலத்துடன் இருக்கும் போது பரிசோதனை செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒரு ஊழியன் இரு இளைஞர்களில் ஒருவரை கடுமையாகத் தாக்கி, கீழே தள்ளி பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி, வைரலானது.இதைப் பார்த்தவர்கள் அனைவரும் எவ்வாறு கட்டாயப்படுத்தி ஒருவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்றும், இளைஞர்களை தாக்கியது தவறு என்றும் கண்டித்தனர்.
இந்த சம்பவம் பெரிதானதையடுத்து, பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுர்வ குப்தா தலையிட்டு சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கோரினார். மேலும் அவர் பதிவிட்ட கருத்தில் “ நாகரத்பேட்டையில் இளைஞர்களை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் யாரையும் கட்டாயப்படுத்தி பிசிஆர் பரிசோதனை செய்யக்கூடாது. இளைஞர்களை தாக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை மற்றும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.இந்த வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீசார் மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.