ADMK TVK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் முக்கியமாக தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் அதிமுக கூட்டணியில் சேர்வார் என்று யூகிக்கப்பட்ட நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தற்போது அதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என பலரும் கூறி வருகின்றனர். தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் உறுதியாக இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து இறங்கி வந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்யுடன் விஜய் திரைமறைவில் பேசியதாக பலரும் கூறி வருகின்றனர்.
அந்த பேச்சுவார்த்தையில், அதிமுக, பாஜக கூட்டணியை முறித்து கொள்ள வேண்டும், இதனை பொது வெளியில் பகீரங்கமாக கூறினால் அதிமுக-தவெக கூட்டணி உறுதி செய்யப்படும், அதுமட்டுமல்லாமல் நம்முடைய கூட்டணி ஆட்சி அமைத்தால் முதல் இரண்டரை ஆண்டுகள் நீங்களும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் நானும் முதல்வர் நாற்காலியில் அமரலாம் என்ற நிபந்தனையையும் விஜய் முன் வைத்துள்ளாராம். இது குறித்து இபிஎஸ் எந்த பதிலும் அளிக்காத நிலையில், விஜய்க்காக அவர் பாஜக கூட்டணியை கை விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

