
TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாபெரும் மாநாடுகளையும், 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் நிறைவு பெற்றுள்ளது. ஆறாவதாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்திற்கு காரணம் தவெகவின் அறியாமை என்றும், திமுகவின் சதி என்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மாநில அரசு கையிலிருந்து சிபிஐ கைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பை அளித்து வந்தனர். கரூர் சம்பவத்தின் மூலம் விஜய்க்கு மக்களின் ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில் அவருக்கான ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது.
அதற்கு பதிலாக ஆளுங்கட்சி மீதும், தவெகவின் இரண்டாம் கட்ட தொண்டர்கள் மீதும் அவர்களின் கோபம் திரும்பியது. விஜய் மீது சில தவறுகள் இருந்தாலும், அரசு மீது மக்கள் வெறுப்பை காட்டுகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்திருந்த நிலையில், தற்போது மூத்த பத்திரிகையாளர் பிஸ்மியும் அதனையே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், கரூர் விபத்து தொடர்பாக மக்கள் மனதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
குடும்பத்தினரை பறி கொடுத்தவர்களே விஜய் மீது எந்த தவறையும் கூறவில்லை. நெருக்கடியான இடத்தை ஒதுக்கி விஜய்யை சிக்கலில் மாட்டி விடுகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. இதனால் பாமர மக்களுக்கு விஜய் மீது கரிசனம் தான் ஏற்படும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கரூர் வந்தடைவதற்கு 7 மணி நேரம் தாமதமாகும் என்று விஜய் முன் கூட்டியே அறிந்திருப்பார்.
அந்த தகவலை அவர் அப்போதே இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் இது தான் அவர் செய்த பெரிய தவறு என்றும் பிஸ்மி சுட்டி காட்டினார். மேலும் அனுபவமில்லாத இரண்டாம் கட்ட தலைவர்களால் தான் இந்த தவறு நடந்திருக்கிறது. இதற்கு முழு பொறுப்பையும் விஜய் தான் ஏற்க வேண்டுமென்று சொல்வது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார்.