TVK CONGRESS VCK: அடுத்த வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையையும் திராவிட கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றன. அதிமுக உடன் பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன் முக்கிய கட்சிகளான விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் தொடர்கின்றன.
இந்நிலையில் தான் திமுகவின் கூட்டணி கட்சிகள் விஜய் கட்சியான தவெகவை பயன்படுத்தி ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. விஜய்யை பகடை காயாக மட்டுமே பயன்படுத்தி வருவதால் இவர்கள் திமுகவை விட்டு, புதிய கட்சியான தவெகவில் சேர மாட்டார்கள் என்ற கருத்து பரவியது. ஆனால் உண்மையாகவே திமுகவை விட்டு விலகி தவெகவில் சேர போகிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்த இவர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, காங்கிரஸும், விசிகவும் தவெக உடன் கூட்டணிக்காக பேசி கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவரின் இந்த கூற்று திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசியது மற்றும் விசிகவின் தலைவர் திருமாவளவன் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவது போன்றவை இவர்கள் தவெகவில் சேர்வதற்கான சாத்திய கூறுகளாக பார்க்கப்படுகிறது.

