ADMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மாநில கட்சிகளனைத்தும், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலை மேலும் மேருகேற்றியுள்ளது என்றே சொல்லலாம். தவெக திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதனுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பில்லை. இதனால் திமுகவிற்கு அடுத்த படியாக உள்ள திராவிட கட்சியான அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்ற வியூகங்கள் பரவியது. இபிஎஸ்யின் செயல்பாடுகளும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அது மட்டுமல்லாமல் அதிமுக தற்சமயம் பலவீனமாக இருப்பதால், இபிஎஸ் தவெக கூட்டணி வேண்டுமென்று மறைமுகமாக பல்வேறு இடங்களில் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் அவரது நிலையிலிருந்து பின் வாங்கவில்லை. தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால் இபிஎஸ்யின் எதிர்பார்ப்பு அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தது. விஜய் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்த கோபத்தில் இருந்த பாஜக தலைவர்களும், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் விஜய்யை நேரடியாக விமர்சித்து வந்தனர்.
ஆனால் விஜய் உடனான கூட்டணிக்கு மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இபிஎஸ் இது வரை விஜய்யை எந்த ஒரு இடத்திலும் விமர்சிக்கவில்லை. இதற்கான காரணத்தை ஆராயும் போது தான், விஜய்யை விமர்சிக்க தொடங்கி விட்டால் அவர் மேன் மேலும் வளர்ந்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் இபிஎஸ் இந்த செயலை செய்யாமல் உள்ளார் என்ற தகவல் வந்தது. அது மட்டுமல்லாமல், இப்போது விஜய்யை விமர்சிக்க தொடங்கி விட்டால் அவருக்கு அதிமுகவின் மேல் அதிருப்தி அதிகமாகி பிற்காலத்தில் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காமல் போய் விடுவாரோ என்ற பயமும் இபிஎஸ்க்கு உள்ளதாக தெரிகிறது என்றும் பலர் கூறுகின்றனர்.

