நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் முன்பு மகனை வெட்டி கொலை செய்த தந்தை! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

Photo of author

By Sakthi

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழழகன் இவருடைய மகன் காசிராஜன் தந்தை மகனிடையே சொத்து பிரச்சனை காரணமாக, தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சொத்து விவகாரம் காரணமாக, தன்னுடைய தந்தையின் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் காசிராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் ஆஜராவதற்கு நேற்றைய தினம் தமிழழகன் அவருடைய தம்பி கடல்ராஜா உறவினர் காசிதுரை உள்ளிட்டோருடன் நீதிமன்றம் சென்று ஆஜராகி விட்டு நீதிமன்றம் மற்றும் தென்பாகம் காவல் நிலையம் எதிரே சென்றுள்ளார்.

அப்போது அங்கே அரிவாளுடன் சென்ற காசிராஜன் திடீரென்று தன்னுடைய தந்தை உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட தமிழழகன், கடல்ராஜா, காசிதுரை உள்ளிட்டோர் காசிராஜனிடம் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை வெட்டியுள்ளனர் என சொல்லப்படுகிறது.

இதனால் பலத்த காயமடைந்த காசிராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை குறித்து தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

காசிராஜன் வெட்டியதில் காயமடைந்த மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த கொலைச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.