நான் தெளிவாத்தான் இருக்கேன்! பத்திரிகையாளர்களிடம் அதிரடியாக தெரிவித்த ராகுல் காந்தி!

Photo of author

By Sakthi

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சியில் அந்த கட்சி தலைமை இறங்கியிருக்கிறது.

இதற்காக இதுவரையில், யாரும் செய்யாத அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் என்றழைக்கப்படும் ராகுல் காந்தி, தேசிய ஒற்றுமை பயணம் என்ற யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி காஷ்மீர் வரையில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் அவருடைய நடைபயணம் ஆரம்பமானது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற இந்த யாத்திரையின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அந்த பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

கன்னியாகுமரி பயணத்தின் 3வது நாளான நேற்றைய தினம் நாகர்கோவிலிலிருந்து தக்கலை நோக்கி பயணம் செய்தார் ராகுல் காந்தி. அவர் தன்னுடைய இலக்கை அடைந்தவுடன் பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது உரையாற்றிய அவர் நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தமிழ் படிப்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தமிழ் மிகவும் அழகான மொழி ஆனால் அதனை கற்றுக் கொள்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது என நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

அந்த  சமயத்தில் ராகுல் காந்தியிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

அதாவது காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்க மறுக்கிறீர்கள், ஆனால் பேரணியை மட்டும் தலைமையேற்று நடத்துகிறீர்களே, இது முரணாக இல்லையா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி நான் இந்த பேரணியில் தலைவராக அல்ல, காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக பங்கேற்றுள்ளேன். நான் இதனை தலைமையேற்று நடத்தவில்லை. தொண்டனாகயிருந்து அனைவரும் பயணிக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது நான் காங்கிரஸ் கட்சியின் தலைமை என்ற பொறுப்புக்கு வரலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக கட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் போது தெளிவாக தெரியும் என்று கூறினார்.

ஏற்கனவே நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக முடிவு செய்து விட்டேன். ஆகவே என்னிடம் எந்தவிதமான குழப்பமும் கிடையாது என்று அவர் பதில் வழங்கினார்.