ஒரு குழந்தை பிறந்த உடனே நம்மை சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தை விட அந்த தாய்க்கு தான் ஒரு சுகமான பாரத்தை இறக்கி வைத்த சந்தோஷம் அதிகமாக இருக்கும். ஆனால் பெண்ணின் பிரசவத்திற்குப் பிறகு அந்தப் பெண் அனுபவிக்க கூடிய வலிகள் அதிகம். அதாவது பிரசவத்திற்குப் பிறகு mood swing என்று சொல்லக்கூடிய கோபம், வலிகள், சந்தோசம், மன அழுத்தம் ஆகிய அனைத்தும் கலந்து ஒரு விதமான வலிகள் அந்தப் பெண்ணிடம் இருக்கும்.
அப்படிப்பட்ட சமயங்களில் அந்தப் பெண் தனது உடம்பை எப்படி எல்லாம் பார்த்துக் கொள்வது, அந்தப் பெண்ணை சுற்றியுள்ள உறவினர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்ப்போம்.
குழந்தை பிறந்த பிறகு அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் தையல்கள் போடப்படும். அதனால் அந்த பெண்ணால் சரியாக நடக்க முடியாது, நன்றாக படுத்து உறங்க முடியாது, மறுபுறம் திரும்பி படுக்க முடியாது இது போன்ற பிரச்சனைகள் அந்த பெண்ணிற்கு ஏற்படும். பிறப்புறுப்பில் போட்ட அந்த தையல் விழுந்து அந்த காயமானது ஆறும் வரை இந்த பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கும்.
இந்த தையல் காயமானது விரைவில் குணமாக sitz bath என்று சொல்லக்கூடிய பொருளை நமது வீட்டு வெஸ்டர்ன் டாய்லெட்டின் மீது வைத்து அதில் கை பொறுக்கக் கூடிய அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி வைக்க வேண்டும். அதன் பிறகு அந்தத் தண்ணீரில் நமது பிறப்புறுப்பு படுமாறு ஒரு பத்து நிமிடம் அமர்ந்து, பிறகு மருத்துவர்கள் கொடுத்த ஆயில்மெண்ட் போடும் பொழுது விரைவாக அந்த காயம் ஆறிவிடும்.
தையல் போட்டிருக்கக் கூடிய சமயத்தில் பெண்களுக்கு மோஷன் போகும்பொழுது வலி ஏற்படும். அவ்வாறு மோஷன் போகும்பொழுது முன் புறத்திலிருந்து பின்புறமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் தான் எந்தவித கிருமிகளும் பிறப்புறுப்பில் படாமல் காயம் விரைவில் ஆறும்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் போடக்கூடிய உள்ளாடையானது லூசாக இருக்க வேண்டும். இவ்வாறு லூசாக போட்டால்தான் பிறப்புறுப்பில் போட்ட தையல் காயம் விரைவில் ஆறும். அதே சமயம் அறுவை சிகிச்சை செய்த பெண்கள் அந்த உள்ளாடையினை தையலுக்கும் மேல் இருக்குமாறு அதாவது இடுப்பு வரையில் இருக்குமாறு போட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிரசவத்திற்குப் பிறகு வயிறு குறைய வேண்டும் என பெண்கள் ஒரு துணியை கொண்டு அல்லது பெல்ட்டைக் கொண்டு வயிறை கட்டிக் கொள்வார்கள். அவ்வாறு கட்டிக் கொள்வதனால் ஒரு விதமான வலு நமது இடுப்பிற்கு கிடைக்குமே தவிர தொப்பையானது குறையாது. தொப்பை குறைய வேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Donut Pillow என்று கடைகளில் கிடைக்கும். அதனை பிரசவம் ஆன பெண்கள் அமரும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பில்லோவின் மீது அமரும் பொழுது பிறப்புறுப்பு தையலில் வலி ஏற்படாது. இந்த பில்லோவினை வாங்க இயலாதவர்கள் ஒரு துணியினை O வடிவில் சுற்றி அதன் மீது அமரலாம்.
பிரசவத்திற்குப் பிறகு நம்மை சுற்றியுள்ள உறவுகளின் அன்பு மிகவும் முக்கியம். எனவே குழந்தைக்கு சளி பிடித்தாலோ, குழந்தை அழுது கொண்டே இருந்தாலோ, அந்தப் பெண்ணிடம் நீ என் குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை? ஏன் குழந்தை அழுகிறது? ஏன் தண்ணீரில் அதிக நேரம் இருந்தாய்? உன்னிடம் பால் இல்லையா? என பலவிதமான கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்கக் கூடாது.
இந்த பலவிதமான கேள்விகள் அந்த பெண்ணிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி, நாம் சரியாக குழந்தையை கவனிக்கவில்லையோ என்ற ஒரு விதமான டிப்ரஷனை ஏற்படுத்தி விடும். எனவே சரி விடு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லக்கூடிய உறவுகள் அந்த பெண்ணிற்கு தேவை.