திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் கும்பாபிஷேகம்! 25ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் மே 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூலவர் சன்னதியின் கோபுரத்தில் இருக்கும் கலசங்களில் தங்கமுலாம் பூசும் பணிகள் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணி சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து மே 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
இன்று அதாவது மே 20ம் தேதி மாலை அங்குரார்பணம் நடக்கவுள்ளது. நாளை அதாவது மே21ம் தேதி காலை யாக சாலையில் புண்யாஹவச்சனம் ரக்ஷா பந்தனம், அதே நாள் மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம் நடக்கவுள்ளது. அதை தொடர்ந்து 22ம் தேதி மற்றும் 23ம் தேதி யாக சாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள் நடைபெறவுள்ளது. 24ம் தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் முதலான சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது.
அதைத் தொடர்ந்து 25ம் தேதி காலை 7.45 மணி முதல் காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், ஹோமங்கள், நிவேதனம், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடக்கவுள்ளது. அதன்.பிறகு அக்ஷதாரோஹனம், அர்ச்சக பவனி நடக்கவுள்ளது.
இதைத் தொடர்ந்து காலை 10.30 மணியிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி மூவரும் சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளிலும் பவனி வந்து மக்களுக்கு அருள் வழங்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.