கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து நான்காம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு,ஆந்திர மாநில அரசு கோவில்கள் திறப்பதற்கான அரசாணை ஒன்றை வெளியிட்டது.
இதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, தரிசன வரிசைகள் மாற்றி அமைக்கப்பட்டது. இருந்தபோதிலும் நான்காம் கட்ட பொது முடக்கத்தில், கோவில்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்து உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிடம், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்கு இணங்கி திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்களை அனுமதி அளிக்கும் அரசாணையை, ஆந்திர அரசு நேற்று மதியம் வெளியிட்டது.
அந்த அரசாணையில் ஒவ்வொரு பக்தர்களுக்கிடையிலும், 6 அடி துாரம் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு வரும் 8ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு, பக்தர்களுக்கு கிடைக்க பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.