எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி நமதே! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Photo of author

By Sakthi

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து 8 வருட காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அதன் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடந்தது இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு உரையாற்றினார்.

தாராபுரத்தில் நடந்த மாநில சட்டசபைத் தேர்தலின்போது தற்சமயம் மத்திய அமைச்சராகயிருக்கின்ற முருகன் மிகவும் கடுமையாக உழைத்து சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

ஆனாலும் கூட அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரவையில் மூன்று இலாக்காக்களை கொடுத்து அழகு பார்த்திருக்கிறது. இதன் காரணமாக, தாராபுரம் மக்களுக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார் அண்ணாமலை.

பாஜக தமிழகத்தில் மாற்றத்திற்கான முன்னேற்றத்தை தேடிக்கொண்டுள்ளது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் ஒருவர் நிச்சயமாக நாடாளுமன்றத்திற்கு செல்வார் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்து 8 வருடங்கள் முடிவடைந்த சூழ்நிலையில் கூட எந்த ஒரு அமைச்சர் மீதும் சிறிதளவு கூட குறை சொல்ல முடியாது. அந்தளவிற்கு நேர்மையாக நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் பதவியேற்ற ஒரு வருடத்திலேயே திமுகவின் அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் தொடர்பான பட்டியலை எதிர்வரும் 5ஆம் தேதி மதுரையில் வெளியிட இருக்கிறோம். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் சட்டமன்றத்திற்கு பாஜகவின் சார்பாக 150 சட்டசபை உறுப்பினர்கள் நிச்சயமாக செல்வார்கள் என கூறினார்.