தமிழக அரசின் பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வருடம் தோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொது மக்கள் சிரமமின்றி கொண்டாடுவதற்காக 2500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, பனைவெல்லம், உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் முதல், நடுத்தர மக்கள் வரையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மகிழ்வுடன் கொண்டாடி வந்தார்கள். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக அளித்த வாக்குறியில் பொங்கல் திருநாளன்று பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் 2500 ரூபாய் இனி வரும் அனைத்து வருட பொங்கல் சமயத்திலும் வழங்கப்படும் என்று அதிமுக தெரிவித்து இருந்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் சுமார் 2.15 கோடி நபர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கடந்த மாத இறுதியில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வருடம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, உள்ளிட்டவை வழங்குவதற்காக தமிழக அரசு ஆயிரத்து 88 கோடி ஒதுக்கி இருக்கிறது. அதே போல ஒரு கரும்புக்கு 33 வீதம் என்று 71.10 கோடி செலவிட இருக்கிறது.

இதில் தற்போது முதல் முறையாக இந்த பொங்கல் விழாவிற்கு ஆவின் நெய்யும் வழங்கப்பட இருக்கிறது, இதற்காக ஆவின் நிறுவனத்திடம் ரூபாய் 130 கோடிக்கு நெய் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் எஸ் எம் நாசர் கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நஜிமுதீன் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தரமான பொருட்களை சரியான சமயத்திற்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.