மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் மின் கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2,811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக எடுத்துச் சென்று மின் இணைப்பு என்னுடன் ஆதார் நம்பரை இணைத்துக் கொள்ளலாம். அரசின் விடுமுறைகளை தவிர்த்து மற்ற அனைத்து தினங்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் காரணமாக, 100 யூனிட் இலவசம் மின்சாரத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.