இந்த உலகில் அனைவரது ஆசையும் நமது வீடானது லட்சுமி கடாட்சத்துடன், செல்வ வளம் பெற்று திகழ வேண்டும் என்பதுதான். செல்வக் கடாட்சம் என்றால் வெறும் பணம், காசு ஆகியவற்றை மட்டும் குறிப்பதில்லை, அந்த வீட்டில் உள்ள அனைவரும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும், நோய் நொடி இன்றி வாழ்வதே செல்வ கடாட்சம் ஆகும்.
அதேபோன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லாமலும், தானியங்களில் குறைவு ஏற்படாமலும், தொழில் வளம், படிப்பு ஆகிய அனைத்தும் நன்றாக இருப்பதே செல்வக்கடாட்சம். ஒரு சிறிய மற்றும் எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் இத்தகைய பல நன்மைகளைக் கொண்ட செல்வ கடாட்சத்தை நாம் பெற முடியும்.
சந்தோஷமும், மகிழ்ச்சியும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக திகழ்வது பணம். இந்த உண்மையை யாராலும் மறுக்கவே முடியாது. குடும்பத்தின் சந்தோஷத்திற்காகவும், நிம்மதிக்காகவும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைக்க வேண்டிய சூழ்நிலை தான் இந்த உலகில் உள்ளது. ஒரு சிலருக்கு என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
அதேபோன்று ஒரு சிலருக்கு ஊதியம் நன்றாக கிடைத்தாலும் கூட, அதில் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது. ஏதேனும் ஒரு செலவுகள் அதாவது சுபச் செலவுகள் ஆகாமல் வீண் விரய செலவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல், மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு செல்வக்கடாட்சம் நமது வீட்டில் நிறைந்து இருக்க இந்த சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும். நேர்மையாக சம்பாதித்த பணம் நம்மை விட்டு கண்டிப்பாக எங்கும் செல்லாது.
நேர்மையாக உழைத்த பணம் நமது வீட்டில் தங்கும். மேலும் அந்த பணத்தை எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தவும் முடியும். நமது குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.
ஏனென்றால் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால், அனைத்து கடவுளின் அருளும் நமக்கு கிடைத்ததற்கு சமமாக இருக்கும். குலதெய்வ கோவிலுக்கு செல்லும் முன்பாக ஒரு மஞ்சள் நிற துணியில் 9 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 9 நாணயங்களும் 9 நவகிரகங்களை குறிக்கும். எனவே ஒவ்வொரு நாணயத்திற்கும் ஒவ்வொரு நவகிரகத்தின் பெயரை சொல்லி அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும்.
குலதெய்வ கோவிலில் வழிபடும் பொழுது அந்த நாணயங்கள் நமது கையில் இருக்க வேண்டும். மேலும் குல தெய்வத்தின் நிழல் அந்த நாணயத்தின் மீது பட்டால் மிகவும் நல்லது. அதன் பிறகு கொடி மரத்தின் அடியில் அந்த நாணயத்தை வைத்து, விழுந்து மனதார கும்பிட்டு வரவேண்டும். அந்த நாணயத்தை இவ்வாறு நமது கையில் வைத்துக்கொண்டு வழிபாடு செய்து விட்டு, மீண்டும் நமது வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.
இந்த நாணயத்தை நமது வீட்டின் பூஜையறையில் வைத்து பிரித்து, அதில் 3 நாணயத்தை நமது அரிசி டப்பாவிலும், 5 நாணயங்களை பருப்பு மற்றும் பிற தானியங்களின் டப்பாக்களிலும் போட்டு வைத்து விட வேண்டும். ஒரு நாணயத்தை அந்த மஞ்சள் நிற துணியிலேயே கட்டி நமது பீரோவில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும்.
இவ்வாறு இந்த பரிகாரத்தை முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் நமது குலதெய்வ கோவிலில் வைத்து வழிபட்டு விட்டு அதனை நமது வீட்டில் கொண்டு வந்து வைக்கும் பொழுது, கண்டிப்பாக நமது வீட்டில் செல்வ கடாட்சம் அதிகரிக்கும்.