DMK ADMK: இன்னும் சில மாதங்களில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சமயத்தில், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும், இதற்கான விழாவும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் முன்னிலை பெறுவது திமுக என்றே கூறலாம். அதிலும் முக்கியமாக திமுகவின் அரசியல் எதிரியான, அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்து வருவது இபிஎஸ்க்கு பாதகமாகவும், ஸ்டாலினுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.
அந்த வகையில், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜி வசம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட பலரும் திமுகவில் இணைந்த நிலையில் அடுத்ததாக, செங்கோட்டையனை இணைப்பதற்கான முயற்சியை செந்தில் பாலாஜி மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து வரும் செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்த திமுகவில் இணைவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும், திமுகவில் இணைவது போன்ற போக்கை காட்டினால், அதிமுக ஒன்றிணையும் என்று செங்கோட்டையன் நினைக்கிறார் என்றும் அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள், கூடிய விரைவில் செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா, இல்லையா என்பது இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் செங்கோட்டையனின் நிலைப்பாடு 2026 தேர்தலை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

