திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் வானிடெக் என்ற பெயரில் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் இருக்கின்ற தோல் கழிவு சுத்திகரிப்பு அறையில் 50 அடி ஆழத்திலுள்ள கழிவுநீர் தரம்பிரித்து சுத்திகரிக்கும் குழாய் பழுதடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனை சரி செய்வதற்காக தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணியாற்றும் நவீன்குமார், மணிகண்டன், ரவிக்குமார் உள்ளிட்டோர் மற்றும் சுதாகர் ஆகியோர் நேற்று மாலை 4 மணி அளவில் இறங்கியிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் குழாயிலிருந்து அதிக அளவு விஷவாயு வெளியானதன் காரணமாக, நவீன்குமார் 50 அடி ஆழத்தில் மயக்கமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் ரவிக்குமார் உள்ளிட்டோருக்கு வாந்தி ,மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றன.
உடனடியாக 3 பேரையும் மீட்டர் சுதாகர் உடனிருந்த பணியாளர்களுடன் மூவரையும் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கே மணிகண்டன் மற்றும் ரவிக்குமாருக்கு சிகிச்சை அளித்து வருகின்ற நிலையில், நவீன்குமார் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன்பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கிய சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.