அறுவை சிகிச்சையின் பொழுது நடந்த விபரீதம்! தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!!
அறுவை சிகிச்சையின் பொழுது இளம் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை செய்த விபரீத காரியத்தால் நீதிமன்றம் அந்த தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அந்த இளம் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அந்த பெண்ணின் கர்பப்பையில் நீர்கட்டி இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அந்த இளம்பெண் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய வயிற்றில் இருந்து கர்பப்பை நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் வயிற்றில் துணிப்பை வைத்து தைத்த சம்பவமும் தெரிய வந்தது. இதை கண்டு அந்த இளம் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து அந்த இளம் பெண் தனது அனுமதி இல்லாமல் வயிற்றில் இருந்த கர்பப்பையை நீக்கியதற்காகவும் வயிற்றில் மருத்துவத் துணியை வைத்து தைத்ததற்கும் அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மேலும் தனக்கு தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அந்த இளம் பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்தது.