மகாராஷ்டிராவில் சோகம்: மூன்று மாடிக்கட்டிடம் இடிந்து விபத்து! 22 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலம் பிவன்டி நகரின் தமங்கர் நகா பகுதியில்,ஜிலானி என்ற பெயரில்,43 ஆண்டுகள் பழமையான மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று செயல்பட்டு வந்தது.இந்த பழமையான கட்டிடத்தில் பல்வேறு குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்தனர்.இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து கடந்த ஆண்டிலும் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், பிவன்டி நிஜாம்பூர் நகராட்சி சார்பில்,கட்டிடத்தில் இருப்பவர்கள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இருந்தபோதிலும் குறைந்த வாடகை காரணமாக அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் குடியிருப்பவர்கள் யாரும் வீட்டை காலி செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3.40 மணி அளவில் இந்த கட்டிடமானது திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 25 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.இவர்கள் பிவன்டி மற்றும் தானே நகர மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது வரை இந்த கட்டிட விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 22 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம்,இடிபடும் நிலையில் இருந்தும்,
நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்த கட்டிட உரிமையாளர் சையது அகமது ஜிலானி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த கட்டிட விபத்து தொடர்பாக இரண்டு நகராட்சி அதிகாரிகளை நகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி,குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.