பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளையும், மத்திய அமைச்சரவை பதவிகளையும், வகித்து வந்த மூத்த தலைவரான வெங்கையா நாயுடு தற்போது ஓரங்கட்டப்பட்டதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
தென் மாநிலமான ஆந்திராவிலிருந்து பாஜகவின் முக்கிய தலைவராக வளர்ந்து வந்தவர் வெங்கையாநாயுடு. அத்வானியின் ரதயாத்திரை காலத்திலிருந்து முதன்மையான கட்சிப் பதவிகளை அவர் வகித்து வந்தார்.
நம்பிக்கை
ஆந்திர மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக தொடங்கி ராஜ்யசபா உறுப்பினராக உயர்ந்து அதன்பிறகு பாஜகவின் பொதுச்செயலாளர், தேசிய தலைவர், போன்ற கட்சிப் பதவிகளை வகித்து வந்தார்.
மத்திய அமைச்சரவையிலும் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்தார். கடந்த 2014ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் ஒளிபரப்புத் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
அதன்பிறகு 2017 ஆம் வருடம் துணை ஜனாதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய 5 ஆண்டுகால பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முடிவுக்கு வருகிறது.
இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னுடைய பெயர் அறிவிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினப் பெண் திரெளபதி முர்மு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பாராத வெங்கையாநாயுடு கடுமையான அதிருப்தியிலிருப்பதாக சொல்லப்படுகிறது. வெங்கையாநாயுடுவுக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மிகுந்த நெருக்கம் இருந்தது.
கடந்த 2013ஆம் வருடம் கோவாவில் நடைபெற்ற பாஜக பொதுக்குழு கூட்டத்தில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கான முக்கியத்துவம் காட்சியில் குறைய தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இருந்தாலும் கூட அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும், பொறுப்பு வகித்த வெங்கையாவின் நடவடிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.
சென்ற வருடம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபா தலைவரின் மைக் உடைக்கப்பட்டது.
ஆவணங்கள் கிழித்தெறியப்பட்டன, சபையின் மாண்பை காக்குமாறு வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை பணியிடை நீக்கம் செய்யுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டார். ஆனாலும் கடுமையான நடவடிக்கை தேவையில்லை என்று வெங்கையா நாயுடு மறுத்தார்.
இதுகுறித்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் உண்டானது. கடைசியில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் வெங்கையா நாயுடு மீது அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதோடு வெங்கையா நாயுடுவுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டும் என திமுகவின் கட்சி பத்திரிக்கையான முரசொலியில் கட்டுரை வெளியானது.
இது வெங்கையாவின் மீது பாஜகவின் தலைவர்களுக்கு எதிர்மறையான அபிப்பிராயத்தை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு டெல்லியிலுள்ள 3 அரசு பங்களாக்களில் இதில் தங்க விரும்புகிறீர்கள் என்று மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்பி வெங்கையாவிடம் அரசு தரப்பில் கருத்து கேட்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த வெங்கையா நாயுடு குடியரசு தலைவர் பதவி எனக்கு இல்லை என்பதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே என்று கடுமையாக சாடியதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
வெங்கையாநாயுடு பெரும்பாலான நேரத்தை தன்னுடைய சொந்த மாநிலமான ஆந்திராவில் செலவிடுவதாகவும் சில மூத்த தலைவர்கள் அவர் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.
அவருக்கு குடியரசு தலைவர் வாய்ப்பு வழங்கப்படாததற்கு இது போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்துவிட்ட வெங்கையா நாயுடு இனி அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தலைநகர் டெல்லியில் வசிக்க போகிறாரா? அல்லது சொந்த மாநிலமான ஆந்திராவிற்கு குடிபெயர்வாரா? என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும் என்கிறார்கள்.