பொதுவாக இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஏதேனும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். சுப காரிய தடைகள், வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சந்தோஷம் இன்மை, கடன் தொல்லை, நினைத்த காரியங்கள் நடக்காமல் இருப்பது இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும்.
இது போன்ற தீர்க்க முடியாத மற்றும் வெகு நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு, ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் அமாவாசை திதிகளில் மகாலட்சுமி தாயாரை வேண்டி, தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பௌர்ணமி என்று இரண்டு திதிகள் வரும். இந்த திதிகளை நாம் முறையாக பயன்படுத்தி வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் நிறைவான செல்வத்தை நம்மால் பெற முடியும். இந்த இரண்டு தினங்களிலும் கண்டிப்பான முறையில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நமக்கு பணவரவு மற்றும் நினைத்த காரியம் வெற்றி அடைவது என்பது உறுதி.
பொதுவாக சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாட்களில் மகாலட்சுமி பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதனால் தான் அமாவாசை தினத்தில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். இதைத்தான் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பின்பற்றி செல்வவளத்துடன் வாழ்கிறார்கள்.
பொதுவாக நாம் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் தான் மகாலட்சுமி பூஜையை செய்வோம். ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை திதி அன்று மகாலட்சுமி பூஜை செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
அதிலும் குறிப்பாக அமாவாசை நாளானது வெள்ளிக்கிழமையில் வந்தால் மிகவும் சிறப்பு. இத்தகைய நாளில் இரவு சுக்கிர ஹோரையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் ஏற்றுவது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் முழுவதும் அசைவத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் இரண்டு கைப்பிடி அளவு மகாலட்சுமிக்கு உகந்த மருதாணி இலையை பரப்பிக் கொள்ளுங்கள். இந்த மருதாணி இலைக்கு மேல் புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளில் சந்தனம் குங்குமம் வைத்து வைக்க வேண்டும்.
பிறகு இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினத்தில் பசும்பால், கற்கண்டு, கற்கண்டு பொங்கல் போன்ற ஏதாவது வெள்ளை நிறத்திலான பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லை என்னும் பட்சத்தில் சர்க்கரையை கூட நாம் நெய்வேத்தியமாக வைக்கலாம்.
தீபம் ஏற்றி வைத்த பிறகு உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் போற்றிகளையோ, மந்திரத்தையோ கூறி மகாலட்சுமி தாயாரிடம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை நாம் குளிர வைத்துவிடலாம்.
மறுநாள் காலையில் தீபம் ஏற்றும் பொழுது இந்த அகல் விளக்கிற்கு கீழே இருக்கக்கூடிய மருதாணி இலைகளை மஞ்சள், சிவப்பு அல்லது பச்சை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த மூட்டை 48 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 49 வது நாள் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாட்களில், இந்த தீபத்தை முழுமனதோடு ஏற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணவரவில் எந்த வித குறையும் இருக்காது.