AMMK DMK: அதிமுகவிலிருந்து இபிஎஸ்-யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பாஜகவுடன் அமமுக கூட்டணியில் இருந்த போது, 1 வருடத்திற்கு முன்பு அதிமுகவும் பாஜக கூட்டணியில் இணைந்தது. பாஜக இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்காத டிடிவி தினகரன், அண்மையில் கூட்டணியை விட்டு வெளியேறினார்.
இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜக கூட்டணியில் இணைவோம் என்று கூறி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினார். அவர் கூட்டணியிலிருந்து பிரிந்த பிறகு யாருடன் சேர்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வந்தது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட இழப்புகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கரூர் சம்பவம் தொடர்பாக திமுகவிற்கு சாதகமாக பேசியது அவர், திமுகவில் இணைய போவதற்கான அறிகுறியாகவே உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கரூர் விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுவதாகவும், விஜய்யை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கூறி வந்த நிலையிலும் கூட முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்தை நிதானமாக கையாண்டது அவரின் அரசியல் அனுபவத்தை காட்டுகிறது என்றும் கூறினார்.
எந்த கட்சி தலைவரும், தனது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று கூறிய முதல்வரின் கருத்து மிகவும் சரியானது என்றும் கூறினார். இதற்காக நான் திமுக அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று எண்ண வேண்டாம் என்றும் விளக்கமளித்தார். டிடிவி தினகரனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அமமுக திமுக உடன் கூட்டணி அமைக்கும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.