AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதிலும், மக்களிடம் தங்களை முன்னிலைப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5 அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.
டிடிவி தினகரன் இபிஎஸ்யை கடுமையாக சாடி வந்த நிலையில், ஒருங்கிணைப்பு தொடர்பாக இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இது குறித்து பேசிய தினகரன் எனக்கும் பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த சண்டையும் இல்லையென்றும், டிசம்பரில் நல்ல செய்தியை சொல்லப்போகிறேன் என்றும் கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நல்ல உறவு இருப்பதாகவும் கூறினார். இதனால் இவர் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினகரன் ஏற்கனவே ஒருமுறை விஜய் உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார்.
தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்கவும், இபிஎஸ்யை பழிவாங்கும் நோக்குடனும் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம் அமமுகவின் அரசியல் பலத்தை நிலைப்படுத்தவும் இது மேற்கொள்ளப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக-திமுக என இரு பெரிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் மூன்றாவது பெரிய அணியாக உருவாக தினகரன் விஜய்யை நாடியுள்ளார் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் அது பாஜகவிற்கும், இபிஎஸ்கும் பெரிய சவாலாக அமையுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை.