டிடிவி தினகரனை காணவில்லையே என்று செய்தித்தாள்களில் செய்திகள் உலா வந்த நேரமோ என்னவோ அவர் தேர்தல் களத்தில் இறங்குவதற்காக தயாராகிவிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் அவர்களுக்கு உண்மையாகவே தலைக்கு மேல் வேலை இருக்கின்றது.
சசிகலா விடுதலை சம்பந்தமான பணிகளை அவர் கவனிக்க வேண்டும். தேர்தல் பணிகள் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும், தன்னுடைய ஒரே மகளின் திருமண ஏற்பாடுகளையும் கவனித்து கொள்ள வேண்டும்.
இப்படியான சூழ்நிலையில், சசிகலா விடுதலை ஆனால் அதன்பிறகு என்னவெல்லாம் நடக்குமோ அதற்கும் தயாராக இருக்க வேண்டும். சின்னம்மா விரைவிலேயே விடுதலை ஆகிவிடுவார். அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று சற்று ஓய்வு எடுத்தார் டிடிவி தினகரன்.
ஆனாலும், சசிகலா விடுதலை இப்போது இல்லை அது ஜனவரி மாதத்திற்கு பின்பு தான் என்று உறுதியாகிவிட்ட நிலையில், வழக்கமான தன்னுடைய பணிகளுக்கு திரும்பிவிட்டார் டிடிவி தினகரன்.
முதல்கட்டமாக தன்னுடைய மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்கும் வேலையில் இறங்கி இருக்கின்றார். இதற்கிடையே தீபாவளி முடிந்த பின்னர் தன்னுடைய பிரச்சார பயணத்தை தொடங்க இருக்கிறார் டிடிவி தினகரன்.
பிரச்சாரத்தின் முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற பேராவூரணியில், ஒரு பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அவருடைய கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராவூரணியில் சசிகலா தரப்பின் உறவினர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த பகுதியில் முத்தரையர், மற்றும் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பாலானோர் வசித்து வருகிறார்கள். ஆகவேதான் டிடிவி தினகரன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகின்றது.