TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இந்த முறை அதிமுக, திமுக என இல்லாமல், நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலை ஆட்டம் காண வைத்துள்ள நிகழ்வு என்றால் அது விஜய்யின் அரசியல் வருகை தான். இவர் அரசியலில் குதித்தலிருந்து இப்போது வரை பரவலாக பேசப்பட்டு வருகிறார். தேர்தல் முடிவில் தவெகவின் தாக்கம் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்க்க அதிமுக-பாஜக முயன்று வந்தது.
ஆனால் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற நிபந்தனையால் அதிமுக கூட்டணியை விஜய் மறுத்து விட்டார். மேலும் கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி இல்லையென்ற முடிவிலும் தெளிவாக இருந்தார். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் இருப்பதால் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக, அவரை கூட்டணியில் சேர்த்து போட்டியிடலாம் என்று திட்டம் தீட்டியது. இதற்கு இவர்களுக்கு பக்கபலமாக அமைந்தது கரூர் சம்பவம் என்றே சொல்லலாம்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த பாஜக, கரூர் விபத்தில் விஜய்க்கு சம்மந்தமில்லை. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்று கூறி வந்தது. மேலும் தமிழக அரசு அமைத்த தனி நபர் குழுவில் உடன்பாடில்லாமல், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாஜக எம்.பி.க்கள் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வந்தது. இவ்வாறு விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால், விஜய் கொள்கை எதிரி என்ற நிலையிலிருந்து மாறி பாஜக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் விஜய் திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு, பாஜகவை விமர்சிக்காததால் இது கூட்டணிக்கான சமிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்தேகத்திற்கு தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாஜக-தவெக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எங்கள் அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என்று கூறி விட்டோம். இதற்கு பிறகும் கூட்டணி வருமா என்று கேட்க கூடாது. பாஜக உடன் கூட்டணி இல்லை என்று முடிவாக கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பாஜக-தவெக கூட்டணி குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.