TVK: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யால் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சி துவங்கப்பட்டது. இந்த கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் இருந்தது. இது விஜய்க்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இந்நிலையில் 2026 தேர்தலை எதிர்நோக்கி விஜய் பரப்புரையை மேற்கொண்ட போது, கரூரில் எதிர்பாராத விதமாக 41 இழப்புகள் நிகழ்ந்து விட்டன. இதற்கு திமுக அரசின் சாதி தான் காரணம் என்று தவெக தொண்டர்கள் கூற, தவெகவின் அறியாமை தான் காரணம் என்று திமுகவை சேர்ந்தவர்கள் கூறிவந்தனர்.
இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்தும் அதனை ஏற்க்காத விஜய் சிபிஐ விசாரணை வேண்டுமென மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், தவெக சார்பில் SIRயை எதிர்த்து போராட்டம், சிறப்பு பொதுக்கூட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தவெக மீண்டும் உயிர் பெற தொடங்கியுள்ளது.
அந்த வகையில், நாளை காஞ்சிபுரத்தில், விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பு முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு மட்டுமே என்பதை தவெக தெளிவாக கூறியுள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு QR கோடின் மூலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை, வார இறுதி விடுமுறை தினத்தில் நடைபெறுவதால், கரூர் சம்பவத்திற்கு பின்னும் கூட விஜய் வீக்கெண்ட் பயணத்தை கைவிடவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

