BJP TVK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு புதிய வேகத்தை எட்டியுள்ளது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் மேற்கொண்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில், பாதியளவு தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பீகார் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாஜக தமிழகத்தில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று தான் மக்கள் ஆதரவை பெற்ற கட்சியான தவெகவை கூட்டணியில் சேர்ப்பது.
பாஜகவின் வெற்றிக்கு அதிமுக கூட்டணி மட்டுமே போதாது என்பதை அறிந்த பாஜக மேலிடம் விஜய்க்கு எல்லா வகையிலும் ஆதரவு தெரிவித்து வந்தது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதை கூட கண்டுகொள்ளாத டெல்லி மேலிடம், தவெகவை கூட்டணியில் சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சிகளை பாஜக மேற்கொண்டாலும் இறுதியில் அது தோல்வியிலேயே முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டது. இதனால் தவெகவை சேர்க்கும் பணியை பாஜக கைவிட்டுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்தது.
ஆனால் தற்போது மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்து விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் பணியை பாஜக இன்னும் கைவிடவில்லை எந்தை நிரூபித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுபவர்கள் நிச்சியம் வெற்றி பெறுவார்கள் என்றும் அரசியலில் தனித்து போட்டியிடுவதை விட மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதால் வெற்றி இன்னும் எளிதாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த கருத்து விஜய்க்கும் பொருந்தும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இவரின் இந்த பேச்சு தவெக பாஜகவில் இணையும் வரை விஜய் பற்றிய பேச்சுக்கள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.