TVK TVK: தமிழக அரசியல் அரங்கில் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதில் முதன்மையானது விஜய்யின் அரசியல் வருகை. இவரின் கட்சியான தவெகவுக்கு திராவிட கட்சிகளுக்கு இணையான ஆதரவு இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விஜய் திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறிய நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும் அறிவித்திருந்தார். ஆனாலும் தற்போது வரை தவெக உடன் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் முன் வந்ததாக தெரியவில்லை.
விஜய்க்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருக்க, அதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் தவெகவில் இணைய உள்ளார்கள் என்று விஜய்யும், செங்கோட்டையனும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சேர்க்கை நிகழ இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியிலிருந்த ஜெகதீச பாண்டியன், அக்கட்சியிலிருந்து விலகி, விஜய் கட்சியில் சேர இருப்பதாக தவாகவின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். ஜெகதீச பாண்டியன் இதற்கு முன் நாதகவில் இருந்த நிலையில், சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி, தவாகவுக்கு சென்றார். தற்போது இதிலிருந்தும் விலகி தவெகவில் சேர்வது பேசு பொருளாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு முக்கிய முகங்களின் வரவு விஜய்க்கு மிகப்பெரிய பலமாக இருக்குமென்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.